தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக 2,600 கிலோ மூலிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டு தயாராக உள்ளன.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்காக முதல்கால யாகசாலை பூஜை இன்று(சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக யாகசாலை 22 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு என 3 பிரிவுகளாக யாகசாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. யாகசாலையில் 110 யாக குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
யாகசாலை குண்டங்கள் மற்றும் வேதிகை பீடத்தில் பழமையான முறையில் பஞ்சவர்ணம் கொண்டு பழமையான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் யாகசாலை பந்தலில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், அஷ்டதிக்குபாலகர்கள், தேவகணங்கள், மற்றும் பல்வேறு தெய்வங்களின் சுதை சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
யாகசாலை பூஜையில் பயன்படுத்தக்கூடிய மூலிகை பொருட்கள், நவதானியங்கள், பல்வேறு பழவகைகள் தருமபுரம் ஆதினத்தின் சார்பில் கொண்டு வரப்பட்டு, பெத்தண்ணன் கலையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
யாகசாலை பூஜைக்காக வசம்பு, கருங்காலி, கருடன்கிழங்கு, மிளகு தக்காளி, இலுப்பைபூ, வலம்புரி, மருதாணி விதை, சாரணை வேர், தாமரைகிழங்கு, மாவிளங்கம்பட்டை, அசோகப்பட்டை, பூதாளப்பட்டை, நிலவேம்பு, ஆடாதொடா இலை, ஆடுதின்னாபாலை, வேப்பம்பூ, ஆவாரம்பூ, நீலிஅவுரி இலை, ஊமத்தை விதை, கடுக்காய், புரசன்விதை உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பூக்களை மாலை கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த காட்சி.
இவை தவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, கொய்யாப்பழம் உள்ளிட்ட பழவகைகளுடன், நவதானியங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. 8 கால யாகசாலை பூஜை நடக்கிறது.
ஒவ்வொரு யாகசாலை பூஜையின்போதும் 110 குண்டங்களில் மூலிகை பொருட்கள,, நவதானியங்கள், பழங்களை போட்டு சிவாச்சாரியார்களும், ஓதுவார்களும் பூஜை செய்கின்றனர். பூஜையில் பயன்படுத்துவதற்காக சுமார் 2 ஆயிரத்து 600 கிலோ மூலிகை பொருட்கள் தயாராக உள்ளன.
பூஜை குறித்து சிவாச்சாரியார்கள் கூறும்போது, மொத்தம் 110 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குண்டத்திற்கு ஒரு காலபூஜைக்கு குறைந்தபட்சம் 3 கிலோ மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்படும். இதனால் 8 கால யாகசாலை பூஜைக்கும் சேர்த்து சுமார் 2,600 கிலோ மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்படும் என்றார்கள்.
யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள குண்டங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து தர்ப்பை வைக்கும் பணியில் நேற்று சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர். யாகசாலையை சுற்றிலும் நவதானியங்களால் ஆன முளைபாரி வளர்க்கப்பட்டுள்ளது. மேலும் யாகசாலை பந்தலில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.
யாகசாலை பந்தலுக்கு செல்லும் அனைவரும் பலத்த சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். மூலிகை பொருட்கள், பூக்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் திடீரென சோதனை நடத்தினர்.